மதக்கலவரம் தொடர்பான வீடியோவை யூடியூப்பில் பதிவு செய்த இளைஞர் கைது..!
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள வாடி என்ற பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் ராஜ்புட் பகுதியை ஆட்சி செய்த மன்னரான மகரானா பிரதாபின் பிறந்த நாள் விழா கடைபிடிக்கப்பட்டது. கர்ணி சேனா அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த ஊர்வலத்தின் போது, இரு மதத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் தங்களுக்குள் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இதில், ஒரு மத தலத்தின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
வன்முறை அதிகமானதும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையை கட்டுப்படுத்தினர். இந்த வன்முறை தொடர்பான சம்பவங்களை, சம்பவ இடத்தில் இருந்த மயுர் கடம் (வயது 30) என்ற இளைஞர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். தற்போது, வாடி பகுதியில் இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், வன்முறை சம்பவம் தொடர்பான காட்சிகளை சமூக வலைதளமான யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றினார்.
வன்முறை காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பு சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டது. இதனால், மீண்டும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இரு குழுக்கள் இடையே பகமையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக கூறி இந்திய தண்டனைச்சட்டம் 153-ன் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மயூர் கடம் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கடம், நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்