ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை நீட்டிப்பு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ல் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் 3500 கோடி முதலீடு செய்தது. இதுகுறித்து சர்ச்சை எழுந்த நிலையில், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், முன்ஜாமீன் வழக்குகள் இன்று மீண்டும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்பொழுது இருவருக்கும் முன்ஜாமீன் வழங்குவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் இருவரையும் கைது செய்ய விதிக்கப்பட்ட தடை வரும் ஜனவரி 11-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை ஜனவரி 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.