அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் – மஜத அணி சார்பில் குமாரசாமியை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கும் 15 நாள்கள் ஆளுநர் அவகாசம் அளித்துள்ளார்.
11 ஆண்டுகளுக்குப் பிறகு குமாரசாமி முதல்வராக பதவியேற்க இருப்பதால் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த மஜத தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா திட்டமிட்டுள்ளார்.
சோனியா, ராகுலுக்கு அழைப்பு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மட்டுமல்லாது பாஜகவுக்கு எதிரான அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட தேவகவுடா, 23-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உள்ளிட்ட பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்களுக்கு தேவகவுடா தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட இடதுசாரி தலைவர்களையும் தேவுகவுடா அழைத்துள்ளதாகக் கூறப்படு கிறது.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளின் தலைவர்களை ஒரே மேடையில் நிறுத்த தேவகவுடா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைய இந்த பதவியேற்பு விழாவை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் கட்சியும் களமிறங்கியுள் ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கர்நாடகத்தில் மஜதவுடன் இணைந்து ஆட்சி அமைத்ததன் மூலம் பாஜகவை காங்கிரஸ் தனிமைப்படுத்தியுள்ளது. இது வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு கை கொடுக்கும். 2019 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமையவும் இது வழிவகுக்கும்’’ என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.