பொது சிவில் சட்டம் அமல்., மீறினால் சிறை, அபராதம்! உத்தரகாண்ட் அரசு அதிரடி அறிவிப்பு!
நாட்டிலேயே முதல் மாநிலமாக பொது சிவில் சட்டம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமலாகியுள்ளது.
டோராடூன் : பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் நிறைவேற்றம் செய்ய வேண்டும் என்பது பாஜகவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். திருமணம், தத்தெடுப்பு, விவாகரத்து, சொத்துரிமை என ஒவ்வோரு மதத்திற்கும் ஒவ்வொரு விதமான முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதனை முறைப்படுத்தி ஒரே மாதிரியான முறைகளை பின்பற்றும் நோக்கில் வகைப்படுத்தப்படுகிறது பொது சிவில் சட்டம்.
முதல் மாநிலம் உத்தரகாண்ட் :
இச்சட்டத்திற்கு பாஜக தரப்பு ஆதரவு தெரிவித்தாலும் , இது மத ரீதியிலான உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படியான சூழலில் பாஜக ஆளும் உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமலாகி உள்ளது. இதன் மூலம் பொது சிவில் சட்டம் அமலாகும் முதல் மாநிலமாக உத்தரகண்ட் மாறியுள்ளது.
உத்தரகாண்ட் சட்டமன்றத்தில்..,
கடந்த 2022 சட்டமன்ற தேர்தலில் உத்தரகாண்ட்டில் வெற்றியடைந்த பாஜக , பொது சிவில் சட்டத்தை மாநிலத்தில் நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அறிவித்து இருந்தது. அதற்கேற்றாற்போல, முதலமைச்சராக பொறுப்பேற்ற புஷ்கர் சிங் தாமி கடந்த மே 2022-ல் இச்சட்டம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்தார். இந்தக் குழு கடந்தாண்டு பிப்ரவரியில் முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. கடந்தாண்டு மார்ச் மாதம் இச்சட்டத்தை அதிகாரப்பூர்வமாக உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் முதலமைச்சர் தாக்கல் செய்தார்.
பொது சிவில் சட்டம் அமல் :
அதனை அடுத்து நேற்று குடியரசு தின விழாவில் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஜனவரி 27 (இன்று) முதல் பொது சிவில் சட்டம் அமலாகும் என அறிவித்தார். அதே போல இன்று பொது சிவில் சட்டம் அமலாகியுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ இணையதள பக்கமும் வெளியாகி உள்ளது.
என்ன சொல்கிறது சட்டம்?
அதன்படி, பழங்குடியின மக்களை தவிர்த்து அனைவருக்கும் ‘பொது சிவில் சட்டம்’ அமலாகிறது என்றும், பொது சிவில் சட்டம் அமலானதை அடுத்து, இனி உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமணம், விவாகரத்து, குழந்தை தத்தெடுப்பு, வாரிசு உரிமை உள்ளிட்ட அனைத்துக்கும் ஒரே ரீதியான சட்டம் அமலாகியுள்ளது.
இதில் ஆணின் திருமண வயது 21 பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்றும், பெண்ணின் திருமண வயது 18 பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ப்பட்டுள்ளது. மேலும் 21 வயதுக்கு உட்பட்டோர் லிவ்ங் டூ கெதர் உறவில் இருந்தால் அதற்கு பெற்றோர் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்றும், லிவிங் டூ கெதர் உறவில் இருப்பவர்களும் பொது சிவில் சட்டத்தின் கீழ் அதனை பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறினால் 3 மாத சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.