பேஸ்புக் பதிவை பகிர்ந்த கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம்..!
கர்நாடகாவில் கடந்த மே 12ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், பெருமளவிலான தொகுதிகளை கைப்பற்றிய பாரதீய ஜனதா கட்சியின் எடியூரப்பா முதல் மந்திரியாக பதவி ஏற்றார். அவர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். ஆனால் சட்டசபையில் உரையாற்றிய பின் முதல் மந்திரி பதவியில் இருந்து அவர் விலகினார்.
இதனை தொடர்ந்து மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை அமைத்தன. முதல் மந்திரியாக மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எச்.டி. குமாரசாமி பதவியேற்றார்.
ஆட்சி அமைத்தபின் 18 நாட்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல் மந்திரி கூறினார். இந்த நிலையில், ஷிகார்பூர் தொகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், 18 நாட்கள் முடிந்து விட்டன. விவசாய கடன்களை எப்பொழுது தள்ளுபடி செய்வீர்கள்? எச்.டி. குமாரசாமி பதவி விலகுங்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து ஹப்பள்ளி-தர்வாத் நகர காவல் ஆணையாளர் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.