பெட்ரோல் விலை இப்படித்தான் உயர்கிறதா..!!
பெட்ரோல் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
பெட்ரோலிய பொருட்கள் மூலம் கணிசமான வருவாய் கிடைப்பதால், அதனை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர மாநில அரசுகள் மறுத்துவிட்டன. சில்லறை விலையை விட 1 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல், ஒரு மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் மீதான வாட் மற்றும் விற்பனை வரி மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. அதிக வரி விதிக்கும் மாநிலமாக, மகராஷ்டிரா உள்ளது. அங்கு, மும்பை, தானே ஆகிய நகரப்பகுதிகளில் பெட்ரோலுக்கு 39.12 சதவிகிதமும், டீசலுக்கு 24.78 சதவிகிதமும் வரி விதிக்கப்படுகிறது. மும்பை தவிர்த்து, இதர பகுதிகளில், பெட்ரோலுக்கு 38.11 சதவிகிதமும், டீசலுக்கு 24.78 சதவிகிதமும் வரி விதிக்கப்படுகிறது.
இரண்டாமிடத்தில் உள்ள மத்திய பிரதேசத்தில் பெட்ரோலுக்கு 35 புள்ளி 78 சதவிகிதமும், டீசலுக்கு 23.22 சதவிகிதமும் வாட் வரி விதிக்கப்படுகிறது. மூன்றாமிடத்தில் உள்ள பஞ்சாபில், பெட்ரோலுக்கு, 35.12 சதவிகிதமும், டீசலுக்கு 16.74 சதவிகிதமும் வரி விதிக்கப்படுகிறது.
விற்பனை வரி விதிப்பில், ஆறாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் பெட்ரோலுக்கு 32.16 சதவிகிதமும், டீசலுக்கு 24.8 சதவிகிதமும் வரி விதிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு, பெட்ரோலிய பொருட்கள் விற்பனை வரி விதிப்பு மூலம் ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
நாட்டிலேயே குறைந்த வரி விதிக்கும் மாநிலமாக கோவா உள்ளது. அங்கு பெட்ரோலுக்கு 16.66 சதவிகிதமும் டீசலுக்கு 18.88 சதவிகித வரியும் விதிக்கப்படுகிறது.
ஆந்திராவில் பெட்ரோலுக்கு 35.77 சதவிகிதமும் டீசலுக்கு 28.08 சதவிகித வாட் வரி விதிக்கப்பட்டு வந்தது. இன்று மொத்த விலையில் 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவது டீலர்களுக்கு அளிக்கப்படும் கமிஷன் தொகை. பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 65 காசுகள் வரையும் டீசலுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் 62 காசுகளும் கமிஷன் தொகையாக அளிக்கப்படுகிறது.
அண்டை நாடுகளான பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல், 57 ரூபாய் 83 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இலங்கை, நேபாளம், வங்கதேசத்திலும் பெட்ரோல் டீசல் விலை இந்தியாவை விட குறைவாகவே உள்ளது.