புவனேஸ்வர்:
உலக அளவில் புகழ் பெற்ற ஜெகன்நாதர் கோவில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் அமைந்துள்ளது. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோவிலின் கருவூல அறையில் ஜெகன்நாதருக்கு அலங்காரம் செய்யும் ஆபரணங்கள் மற்றும் பக்தர்கள் செலுத்திய தங்க, வைர நகைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த கருவூலம் 1905, 1926, 1978 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் கணக்கு பார்க்கப்பட்டு, பட்டியலிடப்பட்டது.
இந்நிலையில், ‘ரத்னா பந்தர்’ என்றழைக்கப்படும் பத்து பகுதிகளை கொண்ட இந்த கருவூல அறையின் சுவர், கூரை, தரை ஆகியவற்றின் உறுதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக 34 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
அப்போது, கருவூலத்தின் உள் அறையில் நகைகள், பணம் மற்றும் இதரப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கான சாவிகள் ஆலய நிர்வாகிகள் யாரிடமும் இல்லை என்றும் அந்த சாவிகள் காணாமல் போனதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, பூரி நகரில் உள்ள ஜெகன்நாதர் ஆலயத்தின் கருவூல சாவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக், ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட்டார்.
நான்கு அதிகாரிகளுடன் 5 நாட்களாக தீவிரமான தேடுதல் பணி நடைபெற்று வந்த நிலையில் நேற்று, பூரி மாவட்ட பதிவு அறையில் இருந்து ‘கரூவூலத்தின் போலி சாவிகள்’ என எழுதப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த கவர் ஒன்றை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த கவரில் கரூவூலத்தை திறக்க பயன்படும் இரண்டு போலி சாவிகள் இருந்துள்ளது. விரைவில் அந்த போலி சாவிகள் ஜெகன்நாதர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என பூரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அகர்வால் இன்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக, ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஒடிசா காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், “கருவூலத்தின் போலி சாவிகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் போலி சாவி போட்டு கருவூலத்தை திறக்க விதிமுறைப்படி அனுமதி இல்லை, இத்தனை நாட்களாக இந்த சாவிகள் எங்கே இருந்தது ? சாவிகள் மாயமான விவகாரத்தில் அரசு மௌனமாக இருப்பது ஏன் ? இப்போது கிடைத்துள்ள போலி சாவிகள் தான் உண்மையான சாவியாக இருக்குமோ என்ற குழப்பத்தில் இந்த அரசு உள்ளது” என தெரிவித்துள்ளார்.