புலியால் பிஜேபி அமைச்சர்கள் மோதல்…!!
மராட்டியத்தில் 13 பேரை வேட்டையாடிய ‘மேன் ஈட்டர்’ அவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்டதை விமர்சனம் செய்த மேனகா காந்திக்கு அம்மாநில வனத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
மராட்டிய மாநிலம் யாவத்மாலா மாவட்டத்தில் உள்ள பந்தர்கவாடா காட்டுப் பகுதியையொட்டிய கிராமங்களில் மனிதர்களை வேட்டையாடிய ‘மேன் ஈட்டர்’ அவ்னி புலியை அம்மாநில அம்மாநில வனத்துறை சுட்டுக்கொன்றது. புலியை கொல்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே புலியின் இரண்டு குட்டிகளின் நிலையென்னவென்று தெரியவில்லை. குட்டிகளை கொல்வதற்கு நீதிமன்றம் அனுமதியை வழங்கவில்லை. மனிதர்களை கொன்ற புலி கொல்லப்பட்டதை கிராம மக்கள் கொண்டாடும் நிலையில் இந்நடவடிக்கைக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் கண்டனமும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தியும் விலங்குகள்நல ஆர்வலர்தான். அவரும் இதற்கு கண்டனம் தெரிவித்தார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், இது குற்றச்செயலாகும் இதுதொடர்பாக மராட்டிய வனத்துறை அமைச்சர் முன்கான்திவார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். மராட்டிய மாநிலம் தேவேந்திர பட்னாவிஸிடம் ஸ்திரமாக எடுத்துச் செல்லவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இப்போது இதற்கு மராட்டிய மாநில வனத்துறை அமைச்சர் முன்கான்திவார் பதிலளிக்கையில் ‘நீங்களே (மேனகா காந்தி) விசாரணைக்கு உத்தரவிடலாம்’ என்று கூறியுள்ளார். அவர் பேசுகையில், “மேனகா காந்தியின் விமர்சனம் அவருக்கு இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான தகவல்கள் தெரியவில்லை என்பதை காட்டுகிறது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்டிசிஏ) வழிமுறையின்படியே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேனகா காந்தி விலங்குகளை நேசிப்பவராக இருக்கலாம். அவர் மத்திய அமைச்சராக இருக்கிறார். நான் புலியால் கொல்லப்பட்ட பெண்களை பற்றி கவலைப்படுகிறேன். அவருடைய கருத்து சரியானது என்று நினைத்தால் என்டிசிஏ வழிமுறைகளில் திருத்தம் கொண்டுவர பரிந்துரை செய்யலாம். 5 பேரை புலி கொன்ற போது மராட்டிய அரசு அதனை பிடிக்க உத்தரவிட்டது.
ஆனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டு சென்றது புலி மேலும் அதிகமானோரை வேட்டையாடியது. வனத்துறை புலிகளுக்கு எதிரானது கிடையாது. புலிக்கு மயக்கமருந்து கொடுக்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். அப்போது அது தாக்க முற்பட்டதால், சுட்டுக் கொல்லப்பட்டது. இவ்விவகாரத்தில் மராட்டிய அரசு வனத்துறை எதிராக எந்தஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. முதல்வரிடம் இப்பிரச்சனையை எடுத்துச் செல்வதற்கு பதிலாக மத்திய அமைச்சராக இருக்கும் மேனகா காந்தியே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடலாம் என கூறியுள்ளார். முன்கான்திவார் காட்டமான முறையில் பதிலுரைத்துள்ளார். இருவரும் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com