புதுடெல்லி-விசாகப்பட்டினம் விரைவு ரயிலில் பிடித்ததில் பயணிகள் பதற்றம்..!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் அருகே ஆந்திரப் பிரதேச விரைவு ரயிலில் தீப்பிடித்ததில் குளிர்வசதி கொண்ட 2 பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன.
புதுடெல்லிக்கும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கும் இடையே ஆந்திரப்பிரதேச விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 6.25மணிக்குப் புதுடெல்லி நிலையத்தில் புறப்பட்ட ரயில் நண்பகல் வாக்கில் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் அருகே பிர்லாநகர் என்னுமிடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது ரயிலின் குளிர்வசதி கொண்ட பெட்டியில் தீப்பிடித்தது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டுப் பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழிறக்கப்பட்டனர்.
ஒரு பெட்டியில் பிடித்த தீ அடுத்த பெட்டிக்கும் பரவியது. தகவல் அறிந்து குவாலியரின் பல்வேறு இடங்களில் இருந்தும் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஒருமணி நேரத்துக்கு மேல் போராடித் தீயை முழுவதுமாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.பயணிகள் உடனடியாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் குளிர்வசதி கொண்ட 2 பெட்டிகளும் அவற்றில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது.