புதிதாக 2 தொழில்பூங்கா! 10 ஆயிரம் பேருக்கு வேலை- முதலமைச்சர்..!

Default Image

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் (சிப்காட்) திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டத்தில் உள்ள கண்ணுடையான்பட்டி, கே.பெரியபட்டி மற்றும் சத்திரப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் சுமார் 1,077 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் சுமார் 5,000 நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவர். இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான உட்புறச் சாலைகள், தண்ணீர் வழங்குவதற்கான வசதிகள், மழைநீர் வடிகால் வசதி, சாலையோர மரங்கள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற வசதிகள் 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும்.

சிப்காட் நிறுவனத்தால், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள பெலாப்குப்பம், கொல்லார் மற்றும் வெண்மணியாத்தூர் ஆகிய வருவாய் கிராமங்களில் சுமார் 720 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 5,000 நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவர். இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான உட்புறச் சாலைகள், தண்ணீர் வழங்குவதற்கான வசதிகள், மழைநீர் வடிகால் வசதி, சாலையோர மரங்கள் மற்றும் தெரு விளக்குகள் போன்ற வசதிகள், 52 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படவிருக்கும் பின்வரும் அறிவிப்புகளை இப்பேரவையில் வெளியிடுகின்றேன்.

தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் மேம்படுத்துதலுக்கு உதவி செய்யவும், தொடக்க நிலை தொழில் முனைவோருக்கு ஆரோக்கியமான சூழலை உறுதிப்படுத்தவும், “தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 2018-2023”ஐ உருவாக்கி, தமிழ்நாடு அரசு நடை முறைப்படுத்த உள்ளது.

இக்கொள்கையினால், அனைத்துத் துறைகளிலும் உள்ள திறமையுள்ள தனி நபர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் தங்களுடைய புத்தாக்க எண்ணங்களை செயல்படுத்தி, சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாக்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முடியும். “தமிழ்நாடு தொலை நோக்குப் பார்வை 2023”-ல் குறிப்பிடப்பட்டுள்ள, ஆண்டுக்கு 11 சதவீத மாநில மொத்த உள்நாட்டு வளர்ச்சி வீதத்தினை அடையும் வகையில் இக்கொள்கை அமையும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் முதலீட்டு மானியச்சலுகைக்கு இணையாக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கும், அதிகபட்ச மானியத் தொகை 25 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

2018-2019-ம் நிதியாண்டில், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், ஆலத்தூர் கிராமத்தில், 70.33 ஏக்கர் நிலப்பரப்பில், 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிட்கோ தொழிற்பேட்டைபகுதி 2 நிறுவப்படும்.

புத்தாக்க பற்றுச் சீட்டு திட்டம் மூலமாக புத்தாக்கம் சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு புத்தாக்கம், தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்கள் மூலமாக புத்தாக்கத்தினை உருவாக்குதல் அல்லது கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு பரிசோதனைக் கூடங்கள் மூலமாக முன்மாதிரி மேம்பாடு மற்றும் பொருட்கள் பரிசோதனை செய்வதற்காக மானியம் வழங்கப்படும். உலக அளவில் பல நாடுகளில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் புத்தாக்கத் திறனை அதிகரித்தல் ஆகும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு 400 தொழில் முனைவோர்களுக்கு புதுமைகளை புகுத்து வதற்காகவும் மற்றும் சிறிய அளவிலான தொழில்நுட்ப சிக்கல்களை அறிவுசார் ஆலோசகர்களுடன் இணைந்து சரி செய்வதற்காகவும், அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக 20 கோடி ரூபாய் செலவிடப்படும்.

5.6.2018 அன்று இப்பேரவையில் நான் அறிவித்த “ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை” அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் விதமாக, எளிதில் மக்கக் கூடிய மாற்றுப் பொருட்களை கண்டறியவும் இத்திட்டம் பெரிதும் உதவும்.

தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பன்னாட்டு மயமாக்கவும், வெளிநாட்டு ஒத்துழைப்பைப் பெறவும், தமிழ்நாட்டில் முதலீட்டை ஈர்க்கவும், “குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு” ஒன்று உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு விரைவாகவும், உரிய காலத்திலும் அனுமதி வழங்கவும், ஒற்றைச்சாளர முறையை செயல்படுத்துவதற்காக வேண்டி ஒருங்கிணைப்பு முகமையாகவும் இது விளங்கும்.

மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முதலீடுகளை மேம்படுத்துதல், வணிக அமைப்புகள், தொழிலக அமைப்புகள் மற்றும் முதலீட்டுக் கொள்கையை முன் மொழிபவர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் படிப்படியாக ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுதல் ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கும் முகமையாகவும் இந்த அமைப்பு செயல்படும் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news
smriti mandhana SCORE
TN RAIN
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu