2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி அக்கட்சியை சேர்ந்த குஜராத் முன்னாள் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். பிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ளார். அவர் பிரதமராக பதவியேற்றதில் இருந்து பாராளுமன்றத்தில் இதுவரை வெறும் 19 முறை மட்டுமே பேசியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதனால் பிரதமர் மோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த வழக்கை தொடுத்துள்ளார். பிரதமர் மோடிதான் இந்திய பிரதமர்களில் மிகவும் குறைவான நாட்கள் பாராளுமன்றத்தில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை பல முறை பாராளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மொத்தம் 19 நாட்கள் மட்டுமே அவர் பாராளுமன்றம் வந்துள்ளார். அதிலும் சராசரியாக ஆண்டிற்கு 4 நாட்கள் மட்டுமே அவர் பாராளுமன்றம் வந்துள்ளார். முக்கியமான நாட்களில் அவர் நாடாளுமன்றம் வரவேயில்லை.
நாடாளுமன்றம் வந்த பின்பும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலே இருந்துள்ளார். அவர் 6 முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு முறை நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு முறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்தும் பேசியுள்ளார். 4 முறை விவாதங்களில் பேசியுள்ளார்.
அவர் இந்த நான்கு நாட்களில் பாராளுமன்றத்தில் இருந்ததை விட அதிகமாக பிரச்சாரம் செய்துள்ளார். மொத்தமாக 800 இடங்களில் அவர் பிரச்சாரம் செய்ய பேசியுள்ளார். ஒவ்வொரு மாதமும் வானொலி மூலம், மான் கி பாத்தில் பேசியுள்ளார். ஒருமுறை பண மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பேசியுள்ளார். ஆனால் மக்கள் பிரச்சனைகள் எதிலும் அவர் பேசவேயில்லை.
மக்களின் முக்கியமான பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., மத பிரச்சனை, ஜாதி படுகொலை, வங்கி மோசடிகள் என எந்த பிரச்சனை குறித்தும் பிரதமர் பேசவில்லை. மேலும் பாராளுமன்றம் நடக்கும் சமயங்களில் பிரதமர் மோடி அதிகமாக வெளிநாடுகளில் இருந்துள்ளார்.