பிரதமர் மீதான நம்பிக்கையை நாடு இழந்து நிற்கிறது – திருமாவளவன்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர். நாடாளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்த நிலையில், இதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
இதனையடுத்து, நாடாளுமன்றத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், பிரதமர் மீதான நம்பிக்கையை நாடு இழந்து நிற்கிறது.
கார்கில் போரில் பங்கேற்ற வீரரின் மனைவியும் மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ளார். சொந்த மண்ணிலேயே மக்கள் அகதிகளாக நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறையில் பெண்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் விவகாரம் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்து ராஷ்டிரா அமைப்போம், இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் அழித்தொழிப்போம், அதற்காகவே ஆயுதம் ஏந்தியுள்ளோம் என்று பாஜகவினர் வெளிப்படையாகக் கூறுகின்றனர்.
குஜராத், ஹரியானா மட்டுமல்ல, ஜெய்ப்பூர் ரயிலில் காவலர் ஒருவர் இஸ்லாமியர்களைத் தேடிச் சென்று, 3 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளார். இந்தியாவில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அஞ்சி, அஞ்சி வாழும் அவலம் இருக்கிறது. சிறுபான்மையினர் மட்டும் பாதிக்கப்படவில்லை, பெரும்பான்மை இந்து சமூகத்தினரும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமையல் எரிவாயு, தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளன. மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது. SC\ST மற்றும் OBC மக்களுக்கான இடஒதுக்கீடு நிரப்பப்படவில்லை. கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டே இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இவை அனைத்திற்கும் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திரமோடி பதவி விலக வேண்டும் தெரிவித்துள்ளார்.