பிரதமர் நரேந்திர மோடி ஸ்வீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு 5 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றார்!
பிரதமர் நரேந்திர மோடி ஸ்வீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு 5 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றார்.
திங்கள் மாலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி முதலில் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் செல்கிறார். செவ்வாய்கிழமை ஸ்வீடன் பிரதமர் ஸ்டீஃபன் லோஃபன்வை சந்தித்து பேச இருக்கிறார். ((stefan lofven )) 1988ல் ராஜீவ் காந்தி சென்றதற்குப் பிறகு ஸ்வீடன் செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார்.
இதனைத் தொடர்ந்து டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நோர்டிக் மாநாட்டில் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். 5 நாட்டுப் பிரதமர்களுடன் இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பிரிட்டன் செல்லும் பிரதமர் மோடி, ராணி இரண்டாம் எலிசபெத், பிரதமர் தெரசாமே ஆகியோருடன் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். அந்த மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷகித்ககான் அபாசியை பிரதமர் மோடி சந்திப்பது உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா தரப்பில் வலியுறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக ஜெர்மனி தலைநகர் பெர்லின் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் தாயகம் திரும்ப திட்டமிட்டிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.