பிரதமர் நரேந்திர மோடி -பிரிட்டன் பிரதமர் தெரசா மே சந்திப்பு !
பிரதமர் நரேந்திர மோடி லண்டனில் பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக பிரதமர் மோடிக்கு லண்டன்வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஸ்வீடனில் நடைபெற்ற நோர்டிக் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்பட்டு, இன்று காலை பிரிட்டன் சென்றடைந்தார். லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் மற்றும் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
காமன்வெல்த் நாட்டுத் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ள பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, இருநாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என தெரசா மே தெரிவித்தார். இந்த சந்திப்பின் மூலம், இருநாட்டு உறவில் புது சக்தி உருவாகும் என நம்புவதாக கூறிய பிரதமர் மோடி, எதிர்கால சந்ததியினருக்காக, பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராட வேண்டியது நமது கடமை என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, தெரசா மே-வை சந்திக்க பிரதமர் மோடி செயிண்ட் ஜேம்ஸ் கோர்ட் நட்சத்திர விடுதியில் இருந்து புறப்பட்டபோது, அங்கு கூடியிருந்த லண்டன்வாழ் இந்தியர்கள், மோடியை வாழ்த்தி முழக்கமிட்டனர். அவர்களுடன் பிரதமர் மோடி கைகுலுக்கி மகிழ்ச்சியை தெரிவித்தார்.
பக்கிங்காம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத்தையும் சந்திக்க உள்ள பிரதமர் மோடி, லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின்னர், பிரிட்டன் வாழ் இந்தியர்களிடையேயும் உரையாற்ற உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.