பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்புத்துறை கண்காட்சி தொடக்க விழாவில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்ப்பு…!
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை நடைபெறும் அதிகாரப்பூர்வமாக தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.
சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் புதன்கிழமை தொடங்கி உள்ள பாதுகாப்புத்துறை கண்காட்சி வரும் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 268 ஏக்கர் பரப்பளவில் சுமார் 670 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில் 47 நாடுகளின் ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்தியா சார்பில் டாடா, எல் அண்ட் டி, மஹிந்திரா, டி.ஆர்.டி.ஓ, எச்.ஏ.எல்., பி.இ.எல். உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.
கண்காட்சியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவத் தளவாடத் தயாரிப்பில் முதலீடு செய்வோருக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கும் என்றார்.
இதனைத் தொடர்ந்து கண்காட்சித் திடலில் முப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் அரங்கேறின. அதிநவீன ராணுவ டாங்கிகள் செயல்படும் விதம் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தியா விமானப்படைக்கு சொந்தமான தேஜாஸ், டார்னியர் உள்ளிட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டு சாகசங்களை செய்து காண்பித்தன.
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் அணுகுண்டு தாக்குதலுக்குள்ளான இடங்களில் கதிர்வீச்சின் பாதிப்பை கண்டறியும் திறன் கொண்ட டாங்கிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதே போன்று டாடா நிறுவனம் தயாரித்து வரும் எம்.பி.டி.வி. எனும் குண்டு வீச்சைத் தாங்கிச் செல்லும் கவச வாகனம் பார்வையாளர்களை கவர்ந்தது.
இதனிடையே கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அன்று காலை 9.20 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் வருகிறார். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கி , கார் மூலம் கண்காட்சி மைதானத்திற்கு செல்கிறார். பாதுகாப்பு கண்காட்சியை அதிகாரப்பூர்வமான திறந்து வைத்து முப்படைகளின் சாகச நிகழ்ச்சிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார். 12 மணியளவில் மாமல்லபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் ஐ.ஐ.டி. ஹெலிபேடில் இறங்கி, வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலையின் வழியே கேன்சர் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்புகிறார். பின்னர் 2 மணியளவில் விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்படுகிறார்.
வருகிற 13-ஆம் தேதி அன்று இந்தியா – ரஷ்யா இடையிலான ராணுவ தொழில் கருத்தரங்கமும் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை வரையிலும் பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத்துறை நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. பாதுகாப்புத்துறை சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் பல்வேறு நாடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடையே கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சியின் இறுதிநாளான 14 ஆம் தேதி ராணுவ தளவாட கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டையுடன் சென்றால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
திருவிடந்தையில் கண்காட்சி நடைபெறும் இடம் முழுவதும் ராணுவத்தின் முழுகண்காணிப்பில் உள்ளது. பிரதமர் வருகையையொட்டி தேசிய பாதுகாப்பு படையினரும், 5 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.