பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார் !
இன்று,சீனா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் சீ ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சீனா சென்றடைந்தார். வுஹான் நகரில் பிரதமர் மோடி தங்கியுள்ள ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நேற்றிரவு இந்திய வம்சாவளியினரை பிரதமர் சந்தித்தார். அவருக்கு இந்தியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் சீன அதிபர் சீ ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். டோக்லாம் எல்லையில் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவி 73 நாட்களாக இருதரப்பிலும் பதற்றமான சூழல் நீடித்ததைத் தொடர்ந்து இந்திய-சீன நட்புறவில் விரிசல் உருவானது. இந்த விரிசலை சரிசெய்யும் வகையில் பிரதமர் மோடியின் சீனப்பயணம் அமைந்துள்ளது. இருநாட்டு வர்த்தக மற்றும் ராஜாங்க உறவுகளை மோடியின் பயணம் சீரமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பிற்பகல் சீன அதிபருடன் பேச்சு வார்த்தையை தொடங்க உள்ள பிரதமர் மோடி, நாளை இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையின் போது சீன அதிபருடன் கூடுதலான நேரம் செலவழிப்பார் என்றும் இரு தலைவர்களும் நேருக்கு நேராக பல்வேறு முக்கிய விஷயங்களை விவாதிக்க உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா -பாகிஸ்தான் இடையே வர்த்தகத்திற்கான வழித்தடம் அமைக்கப்பட உள்ளதற்கு இந்தியா தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ள நிலையில் இச்சந்திப்பில் பிரதமர் மோடி இதனை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனர் மாசேதுங்கின் தனி இல்லத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் பேச்சுவார்த்தை நடத்துவார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.