பிரதமர் நரேந்திரமோடி சீன அதிபர் சீ ஜின்பிங்கை நாளை சந்திக்கிறார்!
இரண்டாவது முறையாக இந்தியா-சீனா இடையே நீடிக்கும் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண பிரதமர் மோடியும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.
சீனாவின் குவிங்டோ நகரில் நாளை நடைபெற உள்ள ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி சீன அதிபர் சீ- ஜின்பிங்கை சந்திக்க உள்ளார். ஒரு மாதம் முன்பு உஹானில் சந்தித்த இரு தலைவர்களும் இந்திய-சீன எல்லையில் அமைதி காத்தல், வர்த்தகம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மீண்டும் விவாதிக்க இந்த இரண்டாவது சந்திப்பு வாய்ப்பாக அமையும் என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சீனாவில் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் ஜப்பான், இந்தியா, அமெரிக்க நாடுகளின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீனாவால் இந்தோ-பசிபிக் கடல்பகுதியில் நீடிக்கும் அச்சுறுத்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மோடியும் தமது சீனப் பயணத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஆயினும் பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹூசேனுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார்.
இதனிடையே சீனாவில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பங்கேற்க வரும் உலக நாடுகளின் தலைவர்களுடன் வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.