பிரதமரின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது : யசோதாபென்..!
பிரதமர் நரேந்திர மோடிக்கு திருமணமாகி யசோதாபென் என்கிற மனைவி இருக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் தற்போது பிரிந்து வாழ்கிறார்கள். யசோதாபென் குஜராத்தில் உள்ள அவருடைய உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மத்தியபிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது ‘பிரதமர் மோடி திருமணம் ஆகாதவர்’ என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனந்திபென்னின் பேச்சுக்கு மோடியின் மனைவி யசோதாபென் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி திருமணம் ஆகாதவர் என்று ஆனந்திபென் பேசியதாக வந்த தகவலை கேட்டு நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன்.
மோடி, 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது அதில் தான் திருமணம் ஆனவர் என்றும், மனைவி பெயர் என்ற இடத்தில் என்னுடைய பெயரையும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
நன்கு படித்து, உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆனந்திபென், ஒரு சாதாரண ஆசிரியையான என்னை போன்று பேசுவதை ஏற்க இயலாது. அவருடைய இந்த பேச்சால் பிரதமரின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது.
மோடி எனக்கு மிகவும் மரியாதைக்குரியவர். அவர் தான் எனக்கு ராமர்.
இவ்வாறு யசோதாபென் கூறியுள்ளார்.