‘பிக் ஆப்ரேஷன்’ 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி..!
ஆனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நேரிட்ட துப்பாக்கி சண்டையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்திய ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் (ஐ.எஸ்.ஜே.கே) தலைவர் உள்பட 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அம்மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.
ஸ்ரீகுப்வாராவில் நடைபெற்ற இந்த சண்டையில் போலீசார் ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவனான தாவூத் ஜம்மு காஷ்மீர் பிராந்திய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் தொடங்கிய ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கம்தான் ஐ.எஸ்.ஜே.கே இயக்கமாகும். பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடந்த சண்டையில் பொதுமக்களில் மூவர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்போது இருதரப்பு இடையிலான சண்டை முடிவுக்கு வந்தது என போலீஸ் தெரிவித்துள்ளது.
ஸ்ரீகுப்வாராவில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படைகள் தேடுதல் வேட்டையில் இறங்கியது, அப்போதுதான் சண்டை வெடித்தது. ஜம்மு காஷ்மீரில் ரமலான் மாத சண்டை நிறுத்தம் முடிந்த பின்னர் ஆட்சி கவிழ்ந்து, ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. ரமலான் சண்டை நிறுத்தத்தை அடுத்து பயங்கரவாதத்திற்கு எதிராக பாதுகாப்பு படையினர் எடுத்த ‘பிக் ஆப்ரேஷனில்’ 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.