பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் – நவ்ஜோத் சிங் சித்து..!
பஞ்சாப் மாநில உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, பக்வாரா நகரின் பங்கா சாலையில் அமைக்கப்பட்டுள்ள பன்னடுக்கு கார் பார்க்கிங் மற்றும் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லத்தில் கட்டப்பட்டுள்ள ஆடிட்டோரியத்தை இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பு உள்ளது. நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான். பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் மற்றும் பிற மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை உருவாக்கும்.
மாநிலம் முழுவதும் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் பணி விரைவில் தொடங்கும். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுஷில் ரிங்குவை சமாதானப்படுத்த உள்ளேன்.
மாநிலத்தில் உள்ள 30 சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்கு ரூ.590 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின்னர், பிரிட்டனில் இருந்து சர்வதேச சுற்றுலா செயற்பாட்டாளர்களை அழைக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.