பாஜக நாட்டை பின்நோக்கி அழைத்து செல்கிறது : ராகுல்காந்தி கடும் தாக்கு
காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை போட்டியின்றி தேர்வான ராகுல்காந்தி தனது பரப்புரையில் பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார்.
காங்கிரஸ் தலைவர்கள் பேசியதை தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி பா.ஜனதாவை ஆவேசமாக தாக்கி பேசினார், அவர் பேசியதாவது, ‘பாஜக அரசு தனக்காக மட்டுமே போராடுகிறது. ஆனால் காங்கிரஸ் நாட்டு மக்கள் அனைவருக்கும் சேர்த்து போராடுகிறது. நாட்டின் அனைத்து மூலையிலும் உள்ள மக்களின் விருப்பங்களை அறிந்து செயல்படும் கருவியாக நான் இருக்கவே விரும்புகிறேன்.
பாஜக நாட்டில் வெறுப்பு அரசியல் மற்றும் மதவாதத்தையும் பரப்பி வருகிறது. அதை நாம் முறியடிப்போம். அவர்கள் தீயை பற்ற வைத்தால் நாம் அணைப்போம். காங்கிரஸ் 21–ம் நூற்றாண்டை நோக்கி இந்தியாவை கொண்டு செல்ல விரும்புகிறது. ஆனால் மோடி தற்போது நாட்டை பின்நோக்கி இழுத்து கொண்டு செல்கிறார்.
பா.ஜனதாவுடன் கொள்கை வேறுபாடு நமக்கு இருந்தபோதிலும் கூட அவர்களை காங்கிரஸ் சகோதர, சகோதரிகளாகவே பார்க்கிறது. வெறுப்பை வெறுப்பால் முறியடிக்க நாம் விரும்பவில்லை.
முன்பும் சரி, எதிர்காலத்திலும் சரி சவால்களை காங்கிரஸ் அன்போடும், கருணையோடுமே எதிர்கொள்ளும். கட்சியின் உயரிய தலைமைப் பதவியை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.’
இவ்வாறு தனது முதல் தலைவர் உரையில் ராகுல்காந்தி பேசினார்.