பாஜக எம்.பிக்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில் பிரதமர் மோடி சென்னையில் சாப்பிட்ட பின் உண்ணாவிரதம் இருந்தது எப்படி? காங். தாக்கு …
காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுரஜேவாலா பாஜக எம்.பிக்கள் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்த நிலையில் பிரதமர் மோடி சென்னையில் சாப்பிட்ட பின் உண்ணாவிரதம் இருந்தது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவினர் போலி உண்ணாவிரதம் இருந்து மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வீணடிக்கப்பட்டதை கண்டித்து பிரதமர் மோடி, அமித் ஷா உட்பட பாஜக எம்.பிக்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பல பகுதிகளிலும் பாஜக எம்.பிக்கள் இன்று உண்ணா விரதம் இருந்தனர். ஆனால் உண்ணாவிரதம் என அறிவித்த விட்டு பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் சாப்பிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுரஜேவாலா கூறியுள்ளதாவது:‘‘பிரதமர் மோடி உங்கள் உண்ணாவிரதத்திற்கு எனது வாழ்த்துகள். காலையில் சென்னை சென்ற பிரதமர் மோடி காலை 6:40 மணிக்கு விமானத்தில் காலை உணவு சாப்பிட்டுள்ளார். பிறகு சென்னையில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் பிற்பகல் 2:25 மணிக்கு மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.
அவது பயணத்திட்டத்திலேயே இது இடம் பெற்றுள்ளது. பிறகு பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருந்தது எப்படி? இதை அவர்தான் விளக்க வேண்டும். இதற்கு பதில் அளிக்கவில்லை என்றால் அவர் பொய்கூறி மக்களை ஏமாற்றுகிறார் என்றுதான் அர்த்தம். அவர் உண்ணாவிரதம் இருந்ததை நிருபிக்க வேண்டும்.
இதுபோலவே கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் பாஜக தலைவர் அமித் ஷா, இன்று பிற்பகல் 1:30 மணியளவில் கடக் கிராமத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். ஆனால் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் உண்ணாவிரதம் இருந்துள்ளதாக பாஜக பெருமை பொங்க கூறுகிறது.
சுயநலம் இல்லாமல் மக்களுக்காக, பிரிட்டிஷ் அரசை எதிர்த்து மகாத்மா காந்தி நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்களை இப்போது நான் நினைத்து பார்க்கிறேன். ஆனால் பாஜக தலைவர் போலி உண்ணாவிரதம் இருந்து மக்களை ஏமாற்றுகின்றனர்’’இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுரஜேவாலா கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.