இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:
”நாடாளுமன்றத்தை காங்கிரஸ் கட்சி முடக்கிவிட்டதாக குற்றம்சாட்டி பாஜக எம்.பி.க்கள் அனைவரும் இன்று உண்ணாவிரதம் இருந்தார்கள். நாங்கள இப்போது கூறுகிறோம். முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள். நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் வேண்டுமென்றே முடக்கிவிட்டு, இப்போது உண்ணாவிரதம் இருப்பதுபோன்று மக்களிடம் பாஜக நாடகம் போடுகிறது.
உத்தரப் பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. அந்த குறிப்பிட்ட எம்எல்ஏவை முதல்வர் ஆதித்யநாத் பாதுகாத்து வருகிறார்.
பிரதமர் மோடி பெண்களுக்கு எதிரான வன்முறையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக, தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாஜக ஆளும் மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநிலங்களில்தான் அதிகமாக நடக்கின்றன எனத் தெரிவித்துள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் பலாத்காரங்களுக்கு எதிராக பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கத் தயாரா?, அல்லது உத்தரப் பிரதேசத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்ட எம்எல்ஏவை கைது செய்யவிடாமல் தடுத்துவரும் முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக மோடி உண்ணாவிரதம் இருக்கத் தயாரா?.
நாடு முழுவதும் பெண்கள் பாலியல் ரீதியாக தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள், ஆனால், பாஜக உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகமாடுகிறது. பெண்கள் விஷயத்தில் அரசியல் செய்யாதீர்கள். இது அமைதியாக இருக்க வேண்டிய நேரம் அல்ல, பிரதமர் மோடி வாய்திறந்து பேச வேண்டும். பிரதமரிடம் இருந்து உண்ணாவிரத்ததை கேட்கவில்லை, மனதில் இருந்து பேச (மான் கி பாத்)வேண்டும் என்று கேட்கிறோம்.
பெண் குழந்தைகளை (பேட்டி பச்சாவோ) பாதுகாப்போம் என்று பிரதமர் மோடியின் பிரச்சாரம் இப்போது எச்சரிக்கையாக மாறி இருக்கிறது. பாலியல் பலாத்காரத்தில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாத்திடுங்கள் என்ற செய்திகளை பெற்றோருக்கு அளிக்கும் செய்தியாக மாறிவிட்டது. பெண் குழந்தைகளை நாம் பாதுகாக்காவிட்டால், பலாத்காரம் நடந்துவிடும் என்ற சூழல் உருவாகிவிட்டது.”
இவ்வாறு கபில் சிபல் பேசினார்.