பாஜகவினர் பேச்சே சரியில்லை!ஊடகங்களுக்கு தேவை இல்லாமல் விளம்பரம் கொடுக்க வேண்டாம்! பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி ,அரைவேக்காட்டுத் தனமான கருத்துகளைக் கூறி, பரபரப்பு செய்திகளுக்கு தேவையான மசாலாவை ஊடகங்களுக்கு அளிக்க வேண்டாம் என பாஜக தலைவர்களை கண்டித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பாஜக தலைவர்கள் பலர், முக்கியப் பிரச்சினைகளில் முரண்பாடான கருத்துகளைக் கூறி சர்ச்சையில் சிக்குவது அதிகரித்து வருகிறது. மகாபாரத காலத்திலேயே இணையதளம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டது, டார்வினின் பரிணாமக் கோட்பாடு தொடர்பான பகுதியை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும், ஆங்காங்கே நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை மிகைப்படுத்திப் பேசி பொதுவான அடையாளமாகக் கூடாது என்பது போன்ற கருத்துகள் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன. தமிழகத்தில் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகர் போன்றோர் அண்மையில் பெண்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துகளால் கடும் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் நமோ ஆப் மூலம் பாஜக எம்பி, எம்எல்ஏக்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடிய பிரதமர் மோடி, அரைவேக்காட்டுத் தனமான கருத்துகளால் ஊடகங்களுக்கு மசாலா அளிப்பதை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சமூக விஞ்ஞானிகளைப் போலவும், வல்லுநர்களைப் போலவும் தங்களைக் கருதிக் கொண்டு கருத்துகளைக் கூறுவதற்கு முன்னர், எதிரே கேமராக்கள் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் கருத்துக் கூறுபவரது அடையாளத்தை மட்டுமின்றி, கட்சியின் மதிப்பையும் குலைக்கும் என்பதை பாஜகவினர் உணர வேண்டும் எனவும் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.