பாஜகவால் 4 ஆண்டுகளில் 10 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள்!பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
13 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் கடந்த 60 ஆண்டுகளில் வழங்கப்பட்ட நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் 10 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், இதில் ஏழை பெண்களுக்கு 4 கோடி இலவச எல்பிஜி இணைப்புகளும் அடங்கும் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பிரதான் மந்திரி உஜ்வாலா ஜோஜனா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற பெண்கள் சிலருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் இன்று கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது,”நான் சிறுவயதில் இருக்கும் போது, என் தாயார், வீட்டில் சமையல் செய்ய விறகுகளையும், மாட்டுச்சாண வரட்டிகளையும் பயன்படுத்துவார். அப்போது கடுமையான புகை வெளிவருவதைப் பார்த்து இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் சமையல் செய்யும்போது ஏற்படும் புகையினால், 15 லட்சம் பெண்கள் இறக்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஏழை பெண்களை விறகு அடுப்பில் இருந்து மீட்ட முடிவு செய்தேன்.
2016-ம் ஆண்டு மே ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இதன் மூலம் அடுத்த 5ஆண்டுகளில் 5 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இந்த அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
பாஜக ஆட்சிக்கு வரும் முன் கடந்த 2014-ம் ஆண்டு வரை நாட்டில் 13 கோடி பேருக்கு மட்டுமே சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் 10 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கியுள்ளோம். இதில் பெரும்பாலும் ஏழை மக்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு கணக்கின்படி, நாட்டில் 72 சதவீத மக்கள் எல்பிஜி மூலம் சமையல் செய்து வருகின்றனர், இதை 2019-ம் ஆண்டுக்குள் 80 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் 10 கோடி எல்பிஜி இணைப்புகளை அரசு வழங்கியுள்ளது. இதில் 45 சதவீதம், அதாவது 4 கோடி இலவச இணைப்புகள் தலித் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தலித்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 2014-ம் ஆண்டில் இருந்து, 1200-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் தலித்துகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 2010-2014-ம் ஆண்டு வரை 445 சில்லறை விற்பனை நிலையங்கள் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டு இருந்தது.
காங்கிரஸ் அரசில் 900 குடும்பங்களுக்கு மட்டுமே எல்பிஜி விநியோக உரிமை வழங்கப்பட்ட நிலையில், எங்கள் அரசு 1300 குடும்பங்களுக்கு அளித்துள்ளது. இடைத்தரகர்களை ஒழித்து, பயனாளிகளுக்கு நேரடியாக உதவிகள் சென்றுசேரவேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா அனைத்து எஸ்சி, எஸ்டி, பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட குடும்பங்கள், காடுகளில் வசிப்போர், ஆற்றின் கரைஓரங்களில் வசிப்போருக்கு தரப்பட்டுள்ளது. இலவச எல்பிஜி இணைப்பில் சில்லறை விற்பனையாளர்களுக்கு ஒவ்வொரு இலவச சமையல் எரிவாயு இணைப்புக்கும் ரூ.1600 மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.
70 சதவீத கிராமங்களில் எல்பிஜி எரிவாயு இணைப்பு 100 சதவீதம் வழங்கப்பட்டுள்ளன, 81 சதவீத கிராமங்களில் 75 சதவீதம் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பெண்கள் சக்தி ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெற உஜ்வாலா யோஜனா திட்டம் சிறப்பாக உதவி செய்யும். எல்பிஜிதான் சுத்தமான, எளிதில் கிடைக்கும் எரிசக்தியாகும். இந்த வகை அடுப்புகள் மூலம் பெண்கள் சமையல் செய்யும் போது, ஆரோக்கியமான வாழ்க்கையையும், நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தலாம், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம்.”இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.