பாகிஸ்தான் துரோகம் செய்கிறது- எல்லை பாதுகாப்பு..!
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலை தொடர்ந்த நிலையில் கடந்த மாதம் 29–ந் தேதி இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைக்கான பொது இயக்குனர்கள் சந்தித்து பேசினர்.
அப்போது 2003–ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை தீவிரமாக கடைப்பிடிப்பது என இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனால் எல்லையில் பாகிஸ்தான் அடாவடியால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு திரும்பிய மக்கள் தங்கள் வீடு திரும்பினர். ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த உறுதிமொழி ஒரு வாரம்கூட நீடிக்கவில்லை. தொடர்ந்து அடாவடியை தொடங்கியது.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரி உள்பட 4 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்திய பாதுகாப்பு படைகள் போர் நிறுத்த ஒப்பந்ததின் புனிதத்திற்கு மதிப்பளிக்கிறது, ஆனால் பாகிஸ்தான் துரோகம் மட்டுமே செய்கிறது என எல்லைப் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி கேஎன் சவுபாய் பேசுகையில், “நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம், போர் நிறுத்தமோ, நிறுத்தம் கிடையாதோ, எல்லையில் எப்போதும் பாதுகாப்பு தீவிரமாகவே இருக்கும், கண்காணிப்பும் தீவிரமாக இருக்கும், என்றார்.
பாகிஸ்தான் மீதான நம்பிக்கை தொடர்பாக பேசுகையில், இருநாட்டு அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, போர் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தியப்படைகள் எப்போதும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் புனிதத்திற்கு மதிப்பளிக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அப்படி கிடையாது, அதனை மீறுகிறது. ஒப்பந்தத்தை இந்தியா எப்போதும் மதிக்கிறது, ஆனால் பாகிஸ்தான் மதிப்பது கிடையாது. பாகிஸ்தான் அதனுடைய பணியை செய்கிறது, அதற்கு சரியான பதிலடியை இந்தியா கொடுக்கும்,” என எச்சரிக்கை விடுத்தார்