பரபரப்பை ஏற்படுத்திய மலையாள வார இதழ்..!
கேரள மாநிலத்தில் வெளிவரும் பிரபல மலையாள வார இதழ் கிரிஹலட்சுமி. இதன் அட்டைப் படத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன், மலையாள எழுத்தாளர் இந்து மேனன் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போல் போஸ் கொடுத்திருந்தார். அதற்கு கீழே, ‘உற்று பார்க்காதீர்கள்; நாங்கள் தாய்ப்பால் அளிக்க வேண்டும்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.
பல்வேறு விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும் ஆளானது. அட்டைப்பட சர்ச்சை தொடர்பாக வார இதழ் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கான மனுவில், மோசமான விளம்பர செயல் என்று வழக்கறிஞர் வினோத் மேத்யூ குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான இதழின் ஆசிரியர், பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, அட்டைப் பக்கத்தில் அந்த புகைப்படத்தை அச்சிட்டிருந்தோம் என்றார்.
முன்னதாக மனைவி தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தை, கணவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். ஆனால் அதனை பலர் கிண்டல் செய்திருந்தனர். இதனைத் தடுக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கிரிஹலட்சுமி வார இதழ் செயல்பட்டது. அட்டைப்படம் சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்த எழுத்தாளர் இந்து மேனன், தான் செய்தது சரிதான்.
இதற்கு எதிர்வினைகள் வரும் என்று தெரியும். சுதந்திரமாக தாய்ப்பால் கொடுக்க விரும்பும் பெண்களுக்காகவே நான் போஸ் கொடுத்தேன் என்று கூறினார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஆபாசம் என்பது பார்ப்பவர் கண்களில் மட்டுமே உள்ளது. எனவே தாய்ப்பால் கொடுப்பது தொடர்பான அட்டைப் பட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுவதாக தெரிவித்தது.