பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொலை: பாகிஸ்தானின் உளவு அமைப்பு தான் காரணம் -மத்திய அரசு குற்றச்சாட்டு..!

Default Image

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ‘ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியரான சுஜாத் புகாரி (வயது 50), நேற்று முன்தினம் தனது காரில் சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சிலர் அவரது கார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் சுஜாத் புகாரியும், அவருடைய பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்-மந்திரி மெகபூபா முப்தி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு முக்கிய பங்கு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.

இது குறித்து பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி ஆர்.கே. சிங் கூறுகையில், “ஐ.எஸ்.ஐ-ன் வழிக்காட்டுதலின் படி தான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர்” என்றார்.

இதற்கிடையே சுஜாத் புகாரி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொலை நடந்த சமயத்தில் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் செல்லும் காட்சிகள் இருந்தன.

இந்த புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அவர்களில் ஒருவனை நேற்று மாலை போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஷுஜாத் புகாரியின் உதவியாளர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, அவரது கைத்துப்பாக்கியை எடுத்துகொண்டு தப்பியோடிய நபரை வீடியோ ஆதாரத்தை வைத்து போலீசார் நேற்று மாலை கைது செய்துள்ளதாக காஷ்மீர் மாநில போலீஸ் ஐ.ஜி. பானி தெரிவித்துள்ளார்.

ஷுஜாத் புகாரியின் உதவியாளர் வைத்திருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டு, கைதான நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்