ஆந்திராவில் கிராமம் ஒன்றில் பகல் நேரங்களில் பெண்கள் நைட்டி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு கோதாவரி மாவட்டம் தோகலாப்பள்ளி கிராமத்தில் பெண்கள் காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணி வரையில் நைட்டி அணிந்துக் கொண்டு தெருவில் வருவதற்கு கிராம பெரியவர்களால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராமத்தை சேர்ந்த மூதாட்டிகள் இம்முடிவில் முக்கிய பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கடைகளுக்கும், பிற பகுதிகளுக்கு செல்லும் போது நைட்டி அணிந்துக் கொண்டு செல்வது மிகவும் அநாகரிகமாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்ததால் அனைவரும் கூடி தடையை விதித்துள்ளனர். தடையை மீறி நைட்டி அணிந்தால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும், புகார் தெரிவிப்பவருக்கு ரூ. 1000 நிதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெண்கள் குறிப்பிட்ட கால நேரத்தில் நைட்டியை அணிவதை தவிர்த்து விட்டனர் என தெரிய வந்துள்ளது. இந்த உத்தரவு ஆறுமாத காலமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தீபாவளியின் போதுதான் உள்ளூர் மீடியாவில் தெரிய வந்துள்ளது. ஆனால் கிராம மக்கள் தரப்பில் இந்த உத்தரவினால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் நிலை சரியில்லாதவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. தடைக்கு எதிராக அதிகாரிகளிடம் எந்த ஒரு புகாரும் தெரிவிக்கப்படவில்லை.
இச்செய்தி மீடியாக்களில் வெளியாகியதும் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணையை மேற்கொண்டுள்ளனர். சட்டத்தை தங்கள் கையில் எடுப்பது சரியானது கிடையாது என கிராம மக்களிடம் அவர்கள் ஆலோசனையை வழங்கியுள்ளனர். தடையினால் அங்கு எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது. யாருக்காவது தண்டனை விதிக்கப்பட்டாலோ, அபராதம் விதிக்கப்பட்டாலோ தகவல் தெரிவியுங்கள் என்று கிராம மக்களிடம் கூறியுள்ளதாக அம்மாநில போலீஸ் கூறியுள்ளது.
dinasuvadu.com