ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார் முன்னாள் முதல்வர்…!!
கால்நடைத் தீவன வழக்கில் தண்டனை பெற்றுள்ள பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி பிரசாத் முன் இன்று சரண் அடைந்தார்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், 4 கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று ராஞ்சியில் உள்ள பிர்ஸா முன்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மே மாதம் 11 ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக அவரை ஆறுவார கால ஜாமீனில் ராஞ்சி உயர்நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
அதன் பின்னர் மகனின் திருமணம், மருத்துவ சிகிச்சைக்காக அடுத்தடுத்து அவரது ஜாமின் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.
மேலும் ஒருமுறை நீட்டிப்பு செய்வதற்காக லாலுவின் வழக்கறிஞர் பிரபாத் குமார் கடந்த 24 ஆம் தேதி தாக்கல் செய்த மனுவை ஏற்றுகொள்ள மறுத்த நீதிபதி ஆகஸ்ட் 30 ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து மும்பை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு கடந்த 25 ஆம் தேதி பாட்னா திரும்பினார்.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட லாலு, விமானம் மூலம் நேற்று மாலை ராஞ்சி வந்தடைந்தார். இன்று காலை ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
DINASUVADU