நாங்கள் பலாத்காரத்தைத் தடுக்க சட்டம் இயற்றிவிட்டோம்!இனி ஆண்மகன்கள் பொறுப்பாக இருக்க வேண்டும்!பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி பலாத்காரத்தைத் தடுக்க நாங்கள் சட்டம் இயற்றிவிட்டோம், இனி நாட்டில் உள்ள மகன்கள்(ஆண்கள்)தான் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
காஷ்மீர் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது, உன்னாவ் பலாத்காரம், சூரத் பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்களால் மக்கள் கொந்தளித்து இருந்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும் கடுமையான போராட்டம் நடத்தினார்கள் பலாத்காரம் செய்பவர்களுக்குத் தூக்கு தண்டனைக் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை அவரசமாகக் கூட்டினார். சிறுமிகள் பாலியல் பலாத்கார தடுப்புச் சட்டமான போக்சோவில் திருத்தம் செய்யப்பட்டது. 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குண் தண்டனையும், மற்ற 16 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளையும், பெண்களையும் பலாத்காரம் செய்பவர்களுக்குத் தண்டனை அளவும் அதிகரிக்கப்பட்டது. இந்த அவசரச்சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் அருகே மண்டல் பகுதியில் பஞ்சாயத்ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று ராஷ்ட்ரிய கிராம சுயராஜ் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த விழாவில் பிரதமர் மோடி பலாத்காரங்களை தடுப்பதற்கான சட்டங்கள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது:
சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை நாம் அனைவரும் கூட்டாக இணைந்து ஏற்படுத்தித்தர வேண்டும். இதற்கான மிகப்பெரிய சமூக இயக்கம் உருவாக்க வேண்டும்.
சிறுமிகளைப் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை மத்தியப் பிரதேச மாநிலஅரசு நிறைவேற்றியுள்ளது. முதல்வர் சிவராஜ் சவுகானின் இந்தச் செயலுக்கு அனைத்துத் தரப்பில் இருந்து வரவேற்பு கிடைத்து வருகிறது.
டெல்லியில் உள்ள எங்களின் அரசும் உங்களின் கோரிக்கைகளையும், குரல்களையும் கேட்டு பெண்கள் பலாத்காரத்தைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் அவர்களுக்குத் தூக்கு தண்டனைக் கிடைக்க சட்டம் இயற்றியுள்ளோம். அதுமட்டுமல்லாமல், பலாத்காரம் செய்பவர்களுக்கான சிறைத் தண்டனையையும் அதிகப்படுத்தியுள்ளோம்.
பலாத்காரத்தைத் தடுக்க நாங்கள் சட்டம் இயற்றிவிட்டோம், இனி நாட்டில் உள்ள மகன்கள்(ஆண்கள்)தான் பொறுப்புடன் நடக்க வேண்டும். நம்முடைய மகள்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்.
குடும்பத்தில் உள்ளவர்கள் பெண்களுக்கும், மகள்களுக்கும் மரியாதை அளித்து, அவர்களை மதிக்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் உள்ள ஆண்களும், மகன்களும் பொறுப்புள்ளவர்களாக மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.