நடிகை ரம்யா_வை அழைக்கும் பாரதீய ஜனதா கட்சி…!!

Default Image

இன்று (சனிக்கிழமை) மண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது. 2 தேர்தலில் வாக்களிக்காத நடிகை ரம்யா இன்றாவது மண்டியாவுக்கு வந்து ஓட்டுப்போடுமாறு பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது.

கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டு 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.பின்னர் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரியும், நடிகருமான அம்பரீசுக்கும், நடிகை ரம்யாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் நடிகை ரம்யா மண்டியா மாவட்ட அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள பிரிவு தலைவியாக நடிகை ரம்யா நியமிக்கப்பட்டார். அவர் சமூகவலைத்தளங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அடிக்கடி கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

கடந்த 31-ந்தேதி குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதுதொடர்பான படத்தையும் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் பிரதமர் மோடி வெள்ளை நிற உடையுடன் காட்சி அளித்தார். அதற்கு நடிகை ரம்யா, இது என்ன பறவையின் எச்சமா? என கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் மன்னிப்பு கேட்க நடிகை ரம்யா மறுத்துவிட்டார்.

இதற்கிடையே நடிகை ரம்யா 2014-ம் ஆண்டுக்கு பிறகு மண்டியா சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் இதுவரை அவர் வாக்குப்பதிவு செய்யவில்லை. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமூகவலைத்தளங்களில் வாக்களிப்பது நமது கடமை என தேர்தலின் போது மட்டும் கருத்து கூறுகிறார். ஆனால் அவர் வாக்களிக்க வருவதில்லை என்று பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் மண்டியா மாவட்ட பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகியான சிவக்குமார் ஆராத்தியா என்பவர், நடிகை ரம்யா மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கண்டிப்பாக ஓட்டளிக்க வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அக்கா… வணக்கம்… ஞாபகம் இருக்கா அக்கா. மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தல் நாளை (அதாவது இன்று) நடக்கிறது. நீங்கள் மண்டியா மாவட்டத்தின் மகள். அக்கா இந்த தேர்தலில் ஓட்டுப்போட நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும். காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம். எங்கள் கட்சி (பா.ஜனதா) வேட்பாளருக்கு ஓட்டுப்போட கண்டிப்பாக மண்டியாவுக்கு வாருங்கள். நீங்கள் பெங்களூருவில் இருந்தாலும், வேறு மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தாலும் வந்து ஓட்டுப்போட்டுவிட்டு செல்லுங்கள் என நையாண்டி கலந்த கிண்டலுடன் அவர் கூறினார். இது கன்னட செய்தி தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்