துப்பாக்கிச் சூட்டை கண்டித்து..! பெங்களூருவில் வேதாந்தா நிறுவனம் முற்றுகை..!!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, பெங்களூருவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வேதாந்தா நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் இயங்கி வருகிறது. இதனை விரிவாக்கம் செய்வதை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து பெங்களூருவில் உள்ள எம்ஜி சாலையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இடதுசாரி அமைப்பினர், கன்னட அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்குள்ள வேதாந்தா நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்நிறுவனத்தின் வளாகத்தில் அமர்ந்து, சுற்றுச்சூழலை கெடுக்கும் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி தொழிற்சங்கமான ஏஐடியூசி-யின் பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான பாலன், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் ராசன், மனித உரிமை ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, ஜனநாயக சோஷலிஸ்ட் அமைப்பின் தலைவர் ஜகதீஷ் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய மனித உரிமை ஆர்வலர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கன்னடம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் உருக்கமாக விவரித்தது சுற்றி இருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.
வழக்கறிஞர் பாலன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்களுக்கு தீங்கிழைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். விதிமுறைகளை மீறி தமிழகத்தில் செயல்பட்டு வரும் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். எவ்வித மனிதாபிமானமும் இல்லாமல் 13 அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற தமிழக முதல்வர், தூத்துக்குடி ஆட்சியர், காவல் துறை தலைவர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும். வன்முறைக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். தூத்துக்குடி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், மத்திய மாநில அரசுகள் உரிய இழப்பீடை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்