துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!
மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் செல்லத்துரை. கடந்த ஆண்டு மே 27-ந்தேதி அவர் நியமிக்கப்பட்டார்.
இவருக்கு எதிராக மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மதுரை மாவட்ட செயலாளர் லயோனல் அந்தோணிராஜ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் “மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட செல்லத்துரைக்கு பேராசிரியராக 10 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் இல்லை. அவரது நியமனம் சட்ட விரோதமானது. இதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. இதேபோல டிராபிக் ராமசாமியும் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, செல்லத்துரையை துணை வேந்தராக நியமித்த உத்தரவை ரத்து செய்து கடந்த 14-ந்தேதி உத்தரவிட்டது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மீண்டும் சிண்டிகேட், செனட் மற்றும் கவர்னரின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும், இந்த குழு 3 மாதத்துக்குள் புதிய துணை வேந்தரை சட்டத்துக்கு உட்பட்டு பரிந்துரைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி செல்லத்துரை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
அப்போது இந்த வழக்கு இன்று (20-ந்தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி இந்த அப்பீல் மனு இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மறுத்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மனுதாரர் ஆகியோர் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது