தீபக் மிஸ்ரா விவகாரம்:காங்கிரஸ் கடும் கண்டனம் !முடிவெடுக்கும் அதிகாரம் வெங்கய்ய நாயுடுவுக்கு இல்லை !
காங்கிரஸ் , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கோரிய நோட்டீஸ் தொடர்பாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு முடிவெடுக்கும் அதிகாரம், இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மாநிலங்களவையில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 7 கட்சிகள், மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் வழங்கின.
சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானதுதான்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 2 தினங்களில் இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதிக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளை தெரிவித்து பதவி நீக்கம் கோரப்பட்டது.
ஆனால் இந்த கோரிக்கையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நிராகரித்தார். எதிர்கட்சிகள் அளித்த தீர்மான நோட்டீஸ் குறித்து சட்ட நிபுணர்களிடம் கலந்தாலோசித்ததாகவும், தீர்மான விவரங்களை முன்கூட்டியே வெளியிட்டது தவறான நடைமுறை எனவும் அவர் கூறினார்.
தங்கள் கோரிக்கை நிராரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுரஜேவாலா கூறியுள்ளதாவது:
‘‘மாநிலங்களவை தலைவர் என்ற முறையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மான நோட்டீஸின் மீது முடிவெடுக்கும் அதிகாரம் வெங்கய்ய நாயுடுவுக்கு இல்லை. நீதித்துறை குழுவிடம் கருத்து கேட்டுக்கப்படவில்லை. இது உண்மையில் நிராகரிக்கும் ஜனநாயகத்திற்கும், மீட்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போராகும்.
64 எம்.பிக்கள் கையெழுத்திட்டு நோட்டீஸ் அனுப்பிய உடனேயே, ‘இது பழிவாங்கும் நோட்டீஸ்’ என நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்தார். இதன் மூலம் மத்திய அரசின் எண்ணம் வெளிப்படுகிறது. அரசியல் சாசன செயல்பாடுகளை தடுத்து நிறுத்த மத்திய அரசு முயலுகிறது. இதனை முறியடிப்போம்’’ எனக் கூறினார்.
அதேசமயம் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நிராகரித்து இருப்பது சரியான நடவடிக்கை, எம்.பிக்களின் கோரிக்கையில் நியாயம் இல்லை என்பதால் வெங்கய்ய நாயுடு கோரிக்கையை நிராகரித்து சரியான முடிவை எடுத்துள்ளார் என முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலிப் சொராப்ஜி கூறியுள்ளார்.
இதுபோலவே வெங்கய்யா நாயுடுவின் முடிவை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் வரவேற்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.