திருநங்கை ஆசிரியை வேதனை..!
திருநங்கைகளை அரசுக்கள், நீதிமன்றங்கள் மூன்றாம் பாலினத்தவர்களாக அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் அவர்கள் இன்னும் மோசமான பார்வையை எதிர்க்கொண்டுதான் வருகிறார்கள். பல்வேறு துறைகளில் அவர்கள் சாதித்தாலும் சமூகத்தில் அவர்கள் எதிர்க்கொள்ளும் துன்பங்களில் எந்தஒரு மாற்றமும் இல்லாமல் தான் செல்கிறது. இதில் திருங்கை ஆசிரியை சுஜித்ரா தேயும் விதிவிலக்கல்ல. கொல்கத்தாவை சேர்ந்த ஆசிரியர் ஹிரன்மாய் தேய் ஆங்கிலம் மற்றும் புவியியலில் முதுகலைப் பட்டம் முடித்து, ஆசிரியர் பயிற்சி படித்தவர். அங்குள்ள பள்ளியில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர். கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துக்கொண்டு திருநங்கையாக மாறிக்கொண்டார். இதனையடுத்து அவர் தன்னுடைய பெயரை சுஜித்ரா தேய் என மாற்றிக்கொண்டார்.
இதனையடுத்து வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் மிகவும் மோசமான சூழ்நிலையில் போராடி வந்துள்ளார். நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது என்னிடம் மோசமான கேள்விகள் எழுப்பட்டாலும் “குழந்தைகள் அனைவரும் என்னை மனித நேயத்துடன்தான் பார்க்கிறார்கள், நடத்துகிறார்கள்,” சிறு மகிழ்ச்சியை உதிர்க்கிறார். பள்ளிக்கூடம் ஒன்றில் இப்போது ஆசிரியையாக பணியாற்றிவரும் சுஜித்ரா தேய் பேசுகையில் கொல்கத்தாவில் உள்ள பல்வேறு பள்ளிகளில் நேர்முகத் தேர்வுகளுக்கு சென்ற போது பாலியல் தொடர்பாக எவ்வளவு மோசமான கேள்விகள் எழுப்பட்டது என்பதை வேதனையுடன் பதிவு செய்தார்.
என்னுடைய மார்பகம் உண்மையானதா? பாலியல் உறவுக்கு அடுத்து என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? என்றெல்லாம் சொல்ல முடியாத கேள்விகளை எழுப்பினார்கள். என்னுடைய சான்றிதழில் ஆண் என குறிப்பிடப்பட்டு இருந்தது போன்று ஆண்களுக்கான ஆடையை மட்டும் அணிய கூறினார்கள் என்கிறார். கொல்கத்தாவில் பல்வேறு பள்ளிகளுக்கு சென்ற போது எல்லாம், ஆசிரியராக என்னுடைய தகுதி என்ன என்பதை பார்க்க எல்லோரும் பார்க்க தவறிவிட்டார்கள், மாறாக பாலியல் என என்னை அவமானப்படுத்தும் கேள்விகளை மட்டும் எழுப்பினார்கள் என்கிறார்.
நான் எதிர்க்கொண்ட மற்றும் எதிர்க்கொள்ளும் பாகுபாடுகள் அனைத்தும் அதிகம் படித்த நடுத்தர வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்துதான். படித்த அவர்கள்கூட அநீதியை தவிர்க்க முடியவில்லை. ஆசிரியராக இருக்கும் நானே பாகுபாட்டால் எரிந்து வருகிறேன். இதில் அதிர்ஷ்டமில்லாத மற்றும் ஆதரவு கிடைக்காதவர்களின் நிலை என்னவாக இருக்கும்? நாங்கள் மிகவும் ஒதுக்கப்படுகிறோம், இதனை நிறுத்த வேண்டிய காலமாகும் என்று கூறியுள்ளார் சுஜித்ரா தேய். “பெற்றோர் மத்தியில் அவர்களுக்கான பார்வையிருக்கலாம், இருப்பினும் குழந்தைகள் என்னை ஒரு நல்ல ஆசிரியராக ஏற்றுக்கொண்டால் அதைவிட எனக்கு வேறு எதுவும் விஷயம் கிடையாது. குழந்தைகள் என்னை பாரபட்சமின்றிதான் பார்க்கிறார்கள்,” என்று குழந்தைகள் காட்டும் அன்பை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.