திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயஸ்.!
இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்,தற்போது கோவாவில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு கோவா தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோவாவிலும் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று வருகிறார்.இதற்காக,மம்தா கோவாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இதற்கிடையில், மாநிலத்தின் பல தலைவர்கள் மற்றும் பிற மக்கள் திரிணாமுல் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.
இந்நிலையில்,இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்,தற்போது கோவாவில் திரிணாமுல் காங்கிரஸில் (டிஎம்சி) இணைந்துள்ளார்.18 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அவர், கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி முன்னிலையில் டிஎம்சி கட்சியில் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்: “லியாண்டர் பயஸ் டிஎம்சியில் இணைந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் என் இளைய சகோதரர். நான் இளைஞர் அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே அவரை அறிவேன்.நாங்கள் வலுவான மாநிலங்களின் ஒன்றியத்தைக் காண விரும்புகிறோம். கூட்டாட்சி அமைப்பு பராமரிக்கப்படுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்” என்று கூறினார்.
கோவாவில் நடந்த அதே நிகழ்வில் நடிகரும் ஆர்வலருமான நஃபிசா அலியும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.