திடீர் பரபரப்பில் கர்நாடக அரசியல்!எம்எல்ஏக்கள் 8 பேர்,2 அமைச்சர்கள் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுடன் திடீர் சந்திப்பு!
முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8பேரும் அமைச்சர்கள் இருவரும் சந்தித்துப் பேசியிருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை, தர்மஸ்தலாவில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8பேரும், அமைச்சர்கள் சிவானந்த பாட்டீல், ரமேஷ் ஜார்க்கிஹோலி ஆகியோரும் சென்று பார்த்துப் பேசியுள்ளனர். அரைமணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்புக் குறித்த காட்சி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்ததும், பட்ஜெட் தாக்கல் செய்ய அவசரம் காட்ட வேண்டாம் என சித்தராமையா தெரிவித்திருந்தார்.
இதேபோல் கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அதை யாரும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8பேரும் அமைச்சர்கள் இருவரும் சித்தராமையாவைச் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.