தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் வங்கி காசாளரை சுட்டு ரூ.10 லட்சம் கொள்ளை…!!
தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் பொதுத்துறை வங்கியின் காசாளரை சுட்டுக்கொன்று ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. 6 முகமூடிக் கொள்ளையர்களின் அட்டூழியம், ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியில், சாவ்லா டவுன் பகுதியில் பொதுத்துறை வங்கியான கார்ப்பரேஷன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு அந்த வங்கிக்கு 6 முகமூடிக்கொள்ளையர்கள் வந்தனர். அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலரை தாக்கி, அவரிடம் இருந்த துப்பாக்கியை பறித்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் வங்கிக்குள் திபுதிபுவென நுழைந்தனர். முகமூடி அணிந்த நிலையில், துப்பாக்கியுடன் நுழைந்த அவர்களைக் கண்டதும் வாடிக்கையாளர்கள் அனைவரும் பதறினர், பதுங்கினர்.ஆனால் அவர்கள் 10 வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்கள் 6 பேரையும் துப்பாக்கிமுனையில் பிணைக்கைதிகளாக பிடித்தனர்.வங்கியில் பணியில் இருந்த காசாளர் சந்தோஷ் குமாரிடம் (வயது 45) இருந்து பணத்தைப் பறிக்க அவர்கள் முயன்றனர். ஆனால் அவர் கொள்ளையர்களை தடுத்தார்.
உடனே ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் காசாளர் சந்தோஷ் குமாரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி விட்டு அங்கு இருந்து ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு, பிடித்து வைத்திருந்தவர்களை விட்டு விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர்.ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த காசாளர் சந்தோஷ்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவரது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டது என அறிவித்தனர்.
இந்த கொள்ளை, பிற்பகல் 3.30 மணியில் இருந்து 3.37 மணிக்குள் 7 நிமிடங்களில் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அங்கு சாவ்லா போலீஸ் நிலைய போலீசார் வந்தனர். அவர்கள் கொள்ளையடிக்கப்பட்ட வங்கியை பார்வையிட்டனர். அங்கிருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தினர்.இதேபோன்று தடயவியல் வல்லுனர்கள் வந்து தடயங்களை கைப்பற்றினர். இந்த சம்பவம் அனைத்தும் அங்குள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
கொள்ளையர்கள் 6 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்ததாகவும், 2 பேர் வங்கிக்கு வெளியே நின்று கொண்டதாகவும், 4 பேர் சேர்ந்து காவலரைத் தாக்கி அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துக்கொண்டு வங்கிக்குள் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொள்ளை, டெல்லி மக்களை பதற வைத்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி துவாரகா பகுதி போலீஸ் துணை கமிஷனர் ஆன்டோ அல்போன்ஸ் கூறும்போது, “கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடக்கின்றன. காசாளர் சந்தோஷ் குமார் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டோம். அவரது உடல், பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி சாவ்லா போலீஸ் நிலையத்தில், இந்த வங்கிக்கொள்ளை பற்றி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தப்படுகிறது” என குறிப்பிட்டார்.
இதற்கிடையே கொள்ளையர்கள் சோனிப்பட்டு, நஜப்கார் பகுதியில் இருந்து வந்தார்கள், அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு விட்டார்கள், மற்றவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் தலைநகரில் நடந்துள்ள முதல் வங்கிக்கொள்ளை இதுதான் என சொல்லப்படுகிறது.
DINASUVADU