தற்கொலை சம்பவங்களை தடுக்க 420 கண்காணிப்பு கேமராக்கள்..!

Default Image

மும்பை நரிமன்பாயிண்ட் பகுதியில் மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயா கட்டிடம் அமைந்துள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தினசரி மந்திராலயாவுக்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கிறார்கள்.

அண்மை காலமாக மந்திராலயா கட்டிடம் தற்கொலை களமாக மாறி வருகிறது.

இங்கு தர்மாபாட்டீல் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்கு பின்னர் மந்திராலயா கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து ஹர்ஷல் ராவ்தே என்ற ஆயுள் தண்டனை கைதி கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனவே இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக மந்திராலயா கட்டிடத்தில் பாதுகாப்பு வலை அமைக்கப்பட்டது.

இருப்பினும் மந்திராலயா கட்டிடத்தில் தற்கொலை முயற்சி சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் துலேவை சேர்ந்த ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு வலை விரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்களை தடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையாக மந்திராலயாவை சுற்றி 420 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாநில அரசு முடிவு செய்து உள்ளது.

இதன்படி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் பயன்பாட்டை அடுத்த மாதம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திறந்து வைக்க உள்ளதாக மந்திராலயா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பதன் மூலம் தற்கொலை முயற்சிகள் தடுக்கப்படுவதுடன், மந்திராலயாவின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்