தமிழக போலீசார் 53 பேர் மீது வழக்குப்பதிவு சி.பி.ஐ. அதிரடி…

Default Image

டெல்லி திகார் சிறையில் கைதிகளை தாக்கிய விவகாரம் தொடர்பாக தமிழக போலீசார் 53 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
டெல்லி திகார் சிறையில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 21–ந் தேதி உயர் பாதுகாப்பு சிறையில் உள்ள 18 கைதிகளிடம் செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் 52 போலீசார் உயர் பாதுகாப்பு அறையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த கைதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கலவரமாக மாறியது. இதில் 18 கைதிகள் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதில், ஒருவரான சின்மய் கனோஜியா என்ற கைதி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, உண்மை கண்டறியும் குழு அமைக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் கைதிகளை பரிசோதனை செய்தனர். பின்னர் இதுபற்றி அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் கைதிகள் தாக்குதலுக்கு ஆளானதால் காயம் அடைந்தனர் என கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து உண்மை கண்டறியும் குழு இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை சப்–இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி உள்ளிட்ட 53 போலீசார் மீது சி.பி.ஐ. நேற்று வழக்குப்பதிவு செய்தது. சப்–இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி ஏற்கனவே தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கைதிகளும் தங்களை தாக்கியதாக, திகார் சிறை அருகே உள்ள ஹரிநகர் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியும் ஒரு புகார் அளித்தார். அதில் திகார் சிறையில் கடந்த நவம்பர் 21–ந் தேதி போலீசார் சோதனை செய்தபோது, வார்டு 6–ல் ‘சி’ பிளாக் பிரிவில் உள்ள காஷ்மீர் பயங்கரவாதிகள் ஆதி‌ஷம், ஹக்கீம் உள்ளிட்ட பல கைதிகள் தங்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாகவும், அவர்கள் பாகிஸ்தானை ஆதரித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.
சிறையில் அபாய மணி அடித்த பிறகு சிறப்பு காவலர்கள் வந்து சம்பந்தப்பட்ட கைதிகளை தடுத்து மீண்டும் சிறையில் அடைத்தனர். கைதிகள் நடத்திய தாக்குதலில் சில போலீசாரும் காயம் அடைந்துள்ளனர் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டது. தற்போது இந்த வழக்கும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
DINASUVADU 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்