தனது ஓ.டி.பி எண்ணை கொடுத்த பெண்! 7 லட்சம் அபேஸ்..!
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் நெருல் பகுதியைச் சேர்ந்த தஸ்னீம் முஜாகர் முடாக் என்ற பெண் போனில் பேசிய அடையாளம் தெரியாத நபர்களிடம் 28 முறை தனது வங்கி ஓ.டி.பி. எண்ணைச் சொல்லியதால் ரூ.7 லட்சம் பணத்தை இழந்திருக்கிறார்.
கடந்த மே 17ஆம் தேதி அவரது கணக்கில் ரூ.7.20 லட்சம் பணம் இருந்திருக்கிறது. அன்று போனில் அழைத்த ஒருவர் தன்னை வங்கி அலுவலர் என்று கூறிக்கொண்டு, முடாக்கின் ஏ.டி.எம். கார்டு முடக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். மீண்டும் அதனை ஆக்டிவேட் செய்ய ஏ.டி.எம். கார்டில் உள்ள 16 இலக்க எண், அதிலுள்ள பெயர் மற்றும் சிவிவி எண் ஆகிவயற்றையும் கேட்டிருக்கிறார் அந்த நபர். முடாக் அனைத்து விவரங்களையும் சொல்லியிருக்கிறார்.
இத்துடன் நிற்காமல் அடுத்த ஒரு வாரத்தில் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வந்த 28 போன் கால்களில் அவர்கள் கேட்டபடி ஓ.டி.பி. எண்ணையும் சொல்லிவிட்டார். இதன் விளைவாக அவரது வங்கிக்கணக்கிலிருந்து ரூ.6,98,973 திருடப்பட்டுவிட்டது.
மே 29ஆம் தேதி பணம் குறைந்திருப்பதை அறிந்துகொண்ட முடாக் நெருல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆன்லைன் பேங்கிங் எனக்கு சுத்தமாகப் புரியவில்லை என்றும் தனது புகாரில் கூறியிருக்கிறார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், 3 சிம் கார்டுகளிலிருந்து முடாக்கிற்கு அழைப்புகள் வந்திருப்பது தெரிந்துள்ளது. மேலும், மும்பை, நொய்டா, குர்கான், கொல்கத்தா மற்றும் பெங்களூரிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.