டெல்லி பெண்களை பாதுகாக்க அரவிந்த் கெஜ்ரிவால் புதிய ப்ளான்?
கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசு ஆள் கடத்தல் வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, உடனடியாக நீதி கிடைக்கும் வகையில், இரவு நேர நீதிமன்றங்களை அமைக்க திட்டமிட்டு உள்ளது.தலைநகர் டெல்லியில், பெண்கள், குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. இத்தகைய சம்பவங்களை தடுப்பது, பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவது, சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்புவது, மேலும், அவர்களுக்கு கல்வி மற்றும் சுகாதார வசதிகளை தந்து, பொருளாதார ரீதியாக மேம்படுத்துவது போன்ற திட்டங்களை செயல்படுத்த, ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கொள்கை வரைவை தயார் செய்துள்ளனர்.
அதில் பிற மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளில் இருந்து பெண்கள்,குழந்தைகள், அதிகம் கடத்தி வரப்படும் நகரமாக டெல்லி மாறி வருவதாக கூறப்படுகிறது. இதை தடுப்பதற்காக, ஒவ்வொரு மாவட்ட அளவிலும், கடத்தல் தடுப்பு பிரிவுடன், புதிகாக ஒரு குழு அமைக்கப்படும்.சிவப்பு விளக்குப் பகுதிகளில் நடக்கும் கடத்தல்களை தடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள், அரசாங்க ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். பெண்களை தங்கள் கஸ்டடியில் வைத்திருப்பவர்களிடம் இருந்து அவர்களை மீட்டு கொண்டுவரத் தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படும். மேலும், வழக்கு தொடர்பாக, நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகமால், ‘வீடியோ கான்பரன்ஸ்’ தொழில்நுட்ப உதவியுடன், சாட்சிஅளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள், இரவு நேரங்களில் போலீஸ் ஸ்டேஷனில் தங்க வைக்கப்படுவதை தடுக்கவும், அவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கவும், இரவு நேர நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். பாதிக்கப்படும் ணெகள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கு தனியாக நிதி ஆதாரம் உருவாக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் நிதி, அவர்களின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தப்படும். இந்த புதிய கொள்கை வரைவு குறித்து, சம்பந்தப்பட்ட அரசு துறையினர், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல, 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பின், இந்த கொள்கை வரைவு, சட்டசபையில் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.