டெல்லி கவர்னர் – முதல்வர் மோதலில் பிரதமரின் தலையீடு அவசியம் : மம்தா
டெல்லியில் அரசு தலைமை செயலாளர் அன்ஷு பிரசாத் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணைநிலை கவர்னர் அனில் பைஜால் கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.
இந்த நிலையில் துணைநிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.
பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இன்று ஏழாவது நாளாக தொடர்ந்து கெஜ்ரிவாலும், அவருடன் இருக்கும் 3 மந்திரிகளும் கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
I along with the Hon’ble CMs of Andhra Pradesh, Karnataka and Kerala have requested Hon’ble PM today to resolve the problems of Delhi government immediately.
— Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2018
இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்துள்ள மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் ஜெஜ்ரிவால் மற்றும் துணைநிலை ஆளுநருக்கு இடையிலான மோதலில் பிரதமர் மோடியின் தலையீடு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக முதல் மந்திரி குமாரிசாமி, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் இணைந்து இந்த கோரிக்கையை பிரதமருக்கு முன்வைப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மம்தா, அரசியலமைப்பு சட்டம் உறுதிப்படுத்தியுள்ள நாட்டின் கூட்டாட்சி என்னும் அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்