விசாரணையில் அந்தச் சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 3 போலீஸார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம். நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 8வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது குறித்து சில இந்தி, ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிகைகள் சிறுமியின் புகைப்படம், அடையாளம், பெயர் உள்ளிட்டவற்றை வெளியிட்டு செய்தி வெளியிட்டன.
இந்த விவகாரத்தை டெல்லி உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்தது. டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி ஹரி சங்கர் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.
அப்போது ஊடகங்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த நீதிபதிகள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுபவர்களின் புகைப்படங்கள், அடையாளங்கள், பெயர்கள் உள்ளிட்டவற்றை அவர்களின் அனுமதியின்றி வெளியிடுவது அந்தரங்க, தனிப்பட்ட உரிமையை மீறுவதாகும்.
அதிலும் போஸ்கோ சட்டப்படி குழந்தைகள் பாதிக்கப்பட்டால், அவர்களின் பெயர்கள், அடையாளம், புகைப்படம், பள்ளியின் பெயர், முகவரி, உள்ளிட்டவற்றை வெளியிடக்கூடாது என்பது தெரியாதா என்று கண்டித்தனர்.
இதுதொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்டு செய்தி வெளியிட்ட 12 ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி ஹரி சங்கர் ஆகியோர் கொண்ட அமர்வு முன் வந்தது.
அப்போது, நோட்டீஸ் அனுப்பப்பட்ட 12 ஊடகங்களில் 9 ஊடகங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினார்கள். அவர்கள் வாதிடுகையில், சட்டத்தில் இதுபோன்ற விதிமுறைகள் இருப்பது தங்களுக்கு தெரியாது, பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம்,பெயர் வெளியிடுவது குறித்து அறிந்திருக்கவில்லை.
அந்தச் சிறுமி இறந்ததால், அவர் பெயரை வெளியிடலாம் என்று சட்டம் குறித்துத் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளோம். இதில் தவறு நடந்துவிட்டது. எனத் தெரிவித்தனர்.
ஆனால், இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. சிறுமியின் புகைப்படம், பெயர், அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அந்த அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தவும், நீதிமன்றம் மூலம் அந்த பணம் ஜம்மு,காஷ்மீர் பாதிக்கப்பட்டவர்கள் நலநிதிக்கு வழங்கப்படும்.
மேலும், காஷ்மீர் சிறுமியின் அடையாளங்கள், பெயர், புகைப்படம் ஆகியவற்றைப் பொதுவெளியில் வெளியிடுபவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.