டெல்லியில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு : 50 பிரபலங்களின் சிலைகள் உள்ளன.
புகழ் பெற்ற மேடம் துஸாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகமானது, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், தாய்லாந்து உள்பட உலகின் பல நாடுகளிலும் முக்கிய நகரங்களில் இந்த அருங்காட்சியகம் இருக்கிறது. இந்த அருங்காட்சியகங்களில் உலகப் புகழ் பெற்ற பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், டெல்லியிலும் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்து பணிகள் ஏற்கனவே நடந்துவந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில், டெல்லியில் மெழுகுச் சிலை அருங்காட்சியகம் நேற்று பொதுமக்களின் பார்வைக்கு நேற்று திறக்கப்பட்டது. இது உலக அளவில் இது 23-வது மெழுகுச் சிலை அருங்காட்சியகமாகும். டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் புகழ் பெற்ற ரீகல் கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில், மகாத்மா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோரின் 50 மெழுகுச் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் பார்வையிட்டு சிலைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.960-ம் சிறுவர், சிறுமியருக்கு 760 ரூபாய் மட்டுமே வசூலிக்கபடுகிறது.