ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதி வழங்கப்படும்…!முதல்வர் மெகபூபா முப்தி
ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதி வழங்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டம், ரசானா என்ற கிராமத்தில் பக்கர்வால் என்ற நாடோடி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஜனவரி 10-ம தேதி காணாமல்போனார். ஒரு வாரத்துக்கு பிறகு அவரது சடலம் அதே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அச்சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு தெரியவந்தது.
இது தொடர்பாக சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இருவர், தலைமைக் காவலர் ஒருவர் உள்ளிட்ட 8 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது. சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து, அவரை மயக்க நிலையில் கோயில் ஒன்றில் அடைத்து வைத்து இக்கும்பல் பலாத்காரம் செய்ததாக புலனாய்வுக் குழு தெரிவிக்கிறது.
ஆனால் இந்த வழக்கில் சிறுபான்மை டோக்ரா சமூகத்தினர் குறிவைக்கப்படுவதாக ஜம்மு பார் அசோசியேஷன் குற்றம் சாட்டியது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி ஜம்முவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இதற்கு எதிராக காஷ்மீர் பள்ளத்தாக்கில் போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்ற பாஜக அமைச்சர்கள் இருவரை முதல்வர் மெகபூபா பதவி நீக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தினார். எனவே இந்த விவகாரம் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி நேற்று விடுத்த செய்தியில், “சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் பொறுப்பற்ற சிலரின் பேச்சு மற்றும் செயல்களால் சட்டப்பூர்வ நடவடிக்கையில் தடை ஏற்படுத்த முடியாது. விசாரணை விரைவாக மேற்கொள்ளப்பட்டு நீதி வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று விடுத்த செய்தியில், “சிறுமிக்கு நேர்ந்தது நினைத்துப் பார்க்க முடியாத கொடூரமாகும். குற்றவாளிகளை தண்டனையிலிருந்து தப்பவிடக்கூடாது. குற்றவாளிகளை சிலர் பாதுகாக்க முயற்சிப்பது வியப்பளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.