ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்: உமர் அப்துல்லா..!
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) பாரதீய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தியது. இந்த நிலையில், சமீப காலமாக இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணியில் மனகசப்பு அதிகரித்துக்கொண்டே இருந்து வந்தது.
மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக பாஜக அறிவித்தது. அதோடு, அக்கட்சிக்கும் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் பாரதீய ஜனதா காஷ்மீர் கவர்னருக்கு கடிதம் அளித்தது. இதையடுத்து, மெகபூபா முப்தியும் தனது முதல் மந்திரி ராஜினாமா செய்தார். இந்த சூழலில், மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடம் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று அம்மாநில முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும், எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க மாட்டோம் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.