தூய்மை இந்தியா மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை முக்கியமானதாக கொண்டு அனைத்து மாநில கவர்னர்கள் பங்கேற்கும் 49-வது மாநாடு இன்று ஜனாதிபதி மாளிகையில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு மொத்தம் 6 அமர்வுகளாக நடைபெற உள்ளது.
இதில், முதலாவது அமர்வில் நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடக்க உரை ஆற்றுகிறார்.
இரண்டாவது அமர்வில், மத்திய அரசின் முக்கிய நல திட்டங்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதை நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தொகுத்து வழங்குகின்றனர். பிரதமர் மோடியும் இந்த அமர்வில் உரை நிகழ்த்த உள்ளார்.
மூன்றாவது அமர்வில், மாநில பல்கலைக்கழங்களின் உயர்கல்வி குறித்தும், மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. குஜராத் கவர்னர் ஒருங்கினைக்கும் இந்த அமர்வை, மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தொகுத்து வழங்க உள்ளார்.
நான்காவது அமர்வில், மாநில கவர்னர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்கள் ‘ராஜ்யபால்- விகாஸ் கே ராஜ்தூத்’ எனப்படும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆளுனர்களின் பங்கு என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதை, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களின் கவர்னரான நரசிம்மன் ஒருங்கினைத்து நடத்த உள்ளார்.
ஜூன் 5-ம் தேதி நடைபெறும் 5வது அமர்வில் மகாத்மா காந்தியின் 150வது நினைவு தினத்தை எப்படி கொண்டாடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த அமர்வை, உத்தரப்பிரதேச கவர்னர், ராம் நாயக் ஒருங்கினைக்க உள்ளார்.
ஆறாவது மற்றும் கடைசி கட்ட அமர்வில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முக்கிய உரை நிகழ்த்துகின்றனர்.