சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த ம.பி- யில் பார்வையாளர்களுக்கு பணம் !மூவர் கைது !
‘ஹன்சா ரிசர்ச் பிரைவேட் லிமிடெட்,மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில், டிஆர்பி காட்டும் அளவீடு கருவிகளை பொருத்தும் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் நடத்திய ஆய்வில், ஒரு சில வீடுகளில் மட்டும் ஒரு குறிப்பிட்ட இந்தி சேனலின் மதிப்பீடு மிகவும் அதிகமாக வருவது தெரியவந்துள்ளது. இதனால், சந்தேகம் கொண்ட நிறுவனம் மாதவ்கன்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. விசாரணையில் அப்பகுதியில் உள்ள வீடுகளின் பார்வையாளர்களுக்கு தினமும் ரூ.500 லஞ்சம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் குவாலியர் மாவட்டக் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் தினேஷ் கவுசல் கூறும்போது, ‘‘இவர்கள் டிஆர்பி காட்டும் அளவீடு கருவிகளை (செட் ஆப் பாக்ஸ்) வைத்துள்ள பார்வையாளர்களை அணுகி லஞ்சம் அளித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட இந்தி சேனலின் டிஆர்பியை உயர்த்த, அதை தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்க்க வலியுறுத்தி உள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் 600-க்கும் மேற்பட்ட சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இவற்றில் தமிழகத்தில் இருந்து வெளியாகும் சேனல்கள் அதிகம். இவற்றில் வெளியாகும் செய்திகள், திரைப்படங்கள், தொடர்களை ரசிக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு டிஆர்பி மதிப்பீடு செய்து வெளியிடும். இப்பணியை, ஏப்ரல் 2016-ல் துவக்கப்பட்ட ‘பார்க் (Broadcast Audience Research Council India)’ எனும் நிறுவனம் செய்து வருகிறது. இவை சேனல்களுக்கு விளம்பரம் அதிகமாக கிடைக்க உதவும்.
இதனால், 98 சதவிகித சேனல்கள் ‘பார்க்’கில் உறுப்பினர்களாகி விட்டனர். விளம்பர நிறுவனங்கள், ஏஜென்ட்டுகளும் பார்க்கின் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த 3 வகையானவர்களுக்கும் வாரந்தோறும் தான் தொகுத்த பார்வையாளர்களின் டிஆர்பிக்களை பார்க் வெளியிடுகிறது. இதற்காக நாடு முழுவதும் 25,000 அளவீடு கருவிகளை பார்க், தொலைக்காட்சிகள் இருக்கும் வீடுகளில் தனியார் நிறுவனங்கள் மூலம் அமைத்து தொகுக்கிறது. இதன்மூலம்தான் டிஆர்பியை கூடுதலாகப் பெற்று அதிகமான விளம்பரங்களை பெற அந்த இந்தி சேனல் முயற்சித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்குமுன், தமிழகத்திலும் ஒரு தமிழ் சேனல் பார்வையாளர்களுக்கு லஞ்சம் அளித்து டிஆர்பி உயர்த்த முயற்சித்ததாகப் புகார் எழுந்தது. இந்த செய்தி கடந்த மார்ச் 11, 2016-ல் ‘தி இந்து’வில் வெளியாகி இருந்தது. இந்த புகாரின் மீது அந்த தமிழ் சேனலிடம் விளக்கம் கேட்டு பார்க் நோட்டீஸ் அனுப்பியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.